• +91 97102 30097
  • reach@yogakudil.org


ஒளிமயமான எதிர்காலம்

 

நாளைய தினம் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையூட்டி, இன்றைய தினத்தின் அருமைகளை அறியாமல் வீணாய் பொழுதுகளை கழிப்பதற்கு என்று உருவாக்கப்படவில்லை *இத்தலைப்பு*


ஆருடம் கூறும் ஆலோசனையைப் போல் இல்லாமல் இன்றைய செயல்களின் பலனே நாளை என்பதை நாம் உணர்வதற்காகவே *இத்தலைப்பு*


இன்று மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் இருந்தால் நாளையும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்மிடம் இருக்கும் என்பதை புரிய வைக்கவே *இத்தலைப்பு*


உண்மை அல்லது கடவுள் நமக்கு தரும் இந்த நல்வாய்ப்பினை கொண்டு நமக்கு நாமே உண்மையாக இருந்து இன்று சிறப்பாக வாழ்ந்து நாளைய தினத்தினை நமக்கு சாதகமான தினமாக மாற்றிக் கொள்வதற்கு தகுந்த தகவல்களை அள்ளி தருவதற்கே. *இத்தலைப்பு*


நிகழ்காலத்தின் அனுபவத்திலிருந்தே எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம் ஆனால் எதிர்காலம் முற்றிலும் புதுமையானதை கொண்டுவரும் என்பதை நிகழ்காலம் நமக்கு உணர்த்துகிறது


இன்றைய புரிதல் நாளைய வாழ்க்கைக்கு உதவாது மனிதமனம் நித்தம் புதுமைகளை படைக்கிறது. புது சூழ்நிலைகளை உருவாக்கி தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.


*அடுத்த வினாடி நம் இடத்தில் இல்லை என்பதே முற்றிலும் உண்மை.*


எதிர்பார்க்கும்படியெல்லாம் எதிர்காலம் இருந்தால் உண்மை பற்றிய அல்லது இறைவன் பற்றிய தெளிவு நமக்கு புரியாது.


எதிர்பார்த்தபடியே எதிர்காலம் இருந்தால் சலிப்பு நிறைந்து வாழ்வின் இன்பம் துன்பம் அற்ற மந்த நிலை தோன்றும்


*நிகழ்காலத்தின் நமது இருப்பு நிலையே எதிர்காலத்தின் பிரதிபலிப்பு, எனவே இன்றே நம்மை நாம் கவனிக்க வேண்டும்.*


எதிர்காலம் என்பது வெறும் கனவு.  கனவு காண்பதால் மட்டும் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. எதிர்காலம் சிறப்பாக இருக்க நிகழ்காலத்தின் குறைகளை புரிந்து கொண்டு அவற்றினை அழித்தால் எதிர்காலம் ஏக்கங்களை தீர்க்கும் காலமாக அமையும்.

பரந்த சிந்தனை, தொலைநோக்கும் பார்வை என்று நிகழ்காலத்தை அலட்சியம் செய்வது முற்றிலும் தவறு. இன்று சுறுசுறுப்பாக இயங்கும் மனிதன் நாளையும் சுறுசுறுப்பாக இயங்குவான் என்பதே உண்மை.


இன்று சோம்பலுடன் செயல் புரிபவன் நாளையும் அப்படியே சோம்பேறியாக செயல்படுவான். எனவே இன்று நம்மால் முடிந்த மட்டும் சிறப்பாக வாழ்ந்தால் நாளை பற்றிய கனவுகள் இன்றியே ஒளிமயமான எதிர்காலத்தை எதிர் கொள்ளலாம்.


ஒவ்வொரு வினாடியும் சிறப்பாக செயல்படுவதற்கு முயன்று அதில் வெற்றி பெற்றால் அடுத்து அடுத்து வரும் வினாடிகளில் அதிசயத்தக்க புதுமைகளை நாம் எதிர் நோக்கலாம்.

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்ந்தால் எதிர்காலம் ஏமாற்றம் இல்லாமல் இருக்கும்.


*நேற்றும் இன்றும் எப்படி மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கிறதோ அப்படியே நாளையும் இன்றிலிருந்து மாற்றத்துடன் அமையும்.*


கடந்தகால வரலாறுகள் நிகழ்காலத்தின் நிகழ்வுகளுக்கு ஆதாரமாக இருப்பதைப் போல இன்றைய நிகழ்வுகள் எதிர்காலத்தின் சம்பவங்களுக்கு ஆதாரமாக அமையும்.


நமது முன்னோர்கள் விதைத்ததை இன்று நாம் அறுவடை செய்கிறோம். இன்றைய அறுவடையின் தன்மையை புரிந்து கொண்டு வருங்கால சந்ததியினருக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும் விதத்தில் இன்றைய விதைத்தல் இருக்க வேண்டும்.


மனிதன் காலத்திற்கு காலம் மாறி பலவிதமான கருவிகளை கையாண்டு தனது தேவைகளை பெருக்கிக்கொண்டே வருகிறான். மேலும் அந்த புதிய கருவிகளிலும் நிறைவின்றி அதிலும் சிறந்தவை அறிமுகம் செய்வதற்கு முனைப்பாக செயல்படுகிறான்.


மனிதன் தன்னை நிர்வாகம் செய்து கொள்ளவேண்டும். நேற்று மனிதனை மனிதன் நிர்வாகம் செய்தான். இன்று மனிதனை மனிதனும், கருவியும் நிர்வாகம் செய்கின்றது,. நாளை....?


நாளை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேமயத்தில் தன்னை தானே நிர்வாகம் செய்து கொள்ளும் தன்மையுள்ள மனிதன் மிகவும் சொற்பமானவனாகவே இருந்திருக்கிறான்.


தன்னை புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனிடம் இருந்தும் ஏனோ தன்னை அறியாமல் தன்னிலை மறந்தே வாழ்கின்றான். 


எதிர்கால மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினை சுய உணர்வின்றியே வாழும் தன்மையை பெறுவது. ஏன் என்றால் இன்றைய மனிதன் போலியான, உணர்வற்ற ஏதோ வாழ்கின்றோம் என்று நம்புகிறான்.


வாழ்வின் சுகம் முழுமையாக அனுபவிக்கப்படாமல் ஏக்கத்துடனேயே கழிக்க வேண்டியதாகவே நிகழ்காலம் இருக்கிறது.


*எல்லாம் எல்லோருக்கும் என்ற நிலை மாறி ஒரு சிலருக்காகவே உலகம் என்ற நிலையை அறிவின் துணையுடன் என்றோ உருவாக்கிவிட்டான். அதன் பொருட்டு நம்மில் அநேகம் ஏக்கம் நிறைந்த வாழ்வையே வாழ்கின்றோம்.*


ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை தன்னளவில் தன்னிறைவு அடைந்தவனாய் திருப்தியுடன் இருக்க முயற்சிக்க வேண்டும்.


*நிகழ்காலத்தினை நாம் கவனமுடன் கழிக்கவில்லை என்றால் எதிர்காலம் ஏக்கமுடன், துக்கம் நிறைந்ததாய் மாறும் என்பதை மனதில் கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நிகழ்காலத்தை நிறைவானதாக மாற்ற வேண்டும்.*


நிகழ்காலத்தில் நிறைவான வாழ்வை எல்லோரும் பெறுவதற்கு உண்டான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை இப்பகுதியில் இனம்கண்டு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.


தொடர்ந்து சிந்திப்போம் அடுத்த பதிவில் சந்திப்போம்…..


நல்லகாலம் நாளை பிறக்கும் என்று நம்பிக்கையூட்டி இன்றைய பொழுதுகளை வீணாய் கழிப்பதற்கு முற்படுவதைவிட இன்றே, இப்பொழுதே, இந்த வினாடியே இன்பம் அடைவதற்கு முயற்சிப்போம்.


சிறந்த விதைகள் இன்று விதைக்கப்படுவதால் நல்ல விளைச்சல் நாளை கிடைக்கும். அறிய செயல்களை இன்று செய்வதால் சிறந்த வெளிப்பாடுகள் நாளை பிறக்கும். 


மனிதனை படைத்து தனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை இந்த பூமி சந்தித்தது. மேலும் அநேக மாற்றத்தை சந்திக்க இருக்கிறது.


மனிதன் தன்னை உயர்த்திக் காட்டினானா? அல்லது இயற்கை மனிதனை உயர்ந்த உயிரினமாக உருவாக்கியதா?

எது உண்மையாக தோன்றினாலும் தவறில்லை. மனிதன் தனது செயல்களால் உயர்வானவன் என்பதில் யாவருக்கும் கருத்து முரண்பாடு இருக்காது.


*மனிதனின் செயல்கள் முற்றிலும் சரியானதாக இல்லை என்பதே உண்மை. காரணம் யாரோ சரி என்று போதித்ததை கடந்து சிந்திக்க துணிவின்றியே பழையவற்றை பாதுகாக்கின்றான்.*


நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே மனிதனின் செயல்கள் இருக்கின்றன. எதையும் ஆராய்ந்து பார்க்கும் துணிச்சல் மனிதனுக்கு போதுமான அளவில் இல்லை.


தனக்கு போதிக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக் கொண்டு தனக்கு ஏதோ புரிந்து விட்டதைப்போல் கால காலமாக செய்கின்றான்.


மனிதன் என்பவன் போலச் செய்யும் விலங்காகவே தனது வாழ்நாள் முழுவதும் இருக்கிறான் என்றால் அது மிகையன்று.


தன்னை ஏதோ ஒரு கூட்டத்திற்கு இணைத்துக் கொண்டு செயல்படுவதை சரி என்றே உணர்வதற்கு காரணத்தை அவன் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.


எதிர்காலத்தை நமது விருப்பத்திற்கு அமைய நமது விருப்பம் எதன் பொருட்டு அமைந்தது என்பதை அறியவேண்டும்.


கல்லையும், மண்ணையும் வணங்கும் தன்மை ஏன் நமக்கு ஏற்பட்டது என்பதையும், நிகரில்லா ஒன்றினை வணங்க எதற்கு ஒழுக்கமுறை என்பதையும், போலிகளால் திரித்த பாசிடிவிசம் என்ற நேர்மறை சிந்தனை எதற்காக என்பதையும் உணர்ந்து இன்று வாழ வேண்டும்.


இன்று சிறப்புற வாழ்ந்தால் நாளை நமதாகவே இருக்கும். ஆனால் கூட்டம் தன்னை சரி என்று நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு நாளைய மனிதன் நமது கொள்கையை பின்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவதையும், மேலும் நாளை நமதே என்ற சித்தாந்தத்தை முன்னிருத்துவதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


உதாரணமாக ஒன்றினை பார்ப்போம். கடவுள் மறுப்பாளர், கடவுளை ஒத்துக் கொண்டவர் என்ற இருசாரரும் தன்னை சார்ந்த மனிதர்களை உருவாக்கும் முயற்சியை மட்டுமே செய்கின்றனர்.


கடவுள் மறுப்பாளர்களும் நம்பிக்கையின் அடிப்படையை ஆதாரமவே செயல்பட்டு, தனிமனித முன்னேற்றம் என்ற பார்வையை கொண்டு கடவுள் மறுப்பாளர்களை உருவாக்கும் முயற்சியில் தன்னை அறிந்தோ அறியாமலோ செயல்படுகின்றனர்.


உண்மையில் கடவுள் என்பது என்ன? என்ற கேள்விக்கு இருசாரரும் சரியாக புரிந்து செயல்படவில்லை என்பதே உண்மை.


ஒளிமயமான எதிர்காலம் நமக்கு உண்டு அதை அடைய தனிமனிதன் சுய அறிவுடன் செயல்பட போதுமான வசதிகள் அமைத்து தருவது நமது கடமை.


நமக்கு புரியவில்லை என்பதை ஒத்துக் கொண்டு அடுத்த மனிதன் புரிந்து கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.


பொதுவாக மனிதன் தன்னை தனது கருத்தை பிறரின் மீது திணிப்பதை மட்டுமே செய்கிறான்.


தனது புரிதல் சரியாக இருக்காமல் இருக்கும் என்பதை பெயரளவில் கூட ஏற்றுக் கொள்வதில்லை.


ஒரு கூட்டம் ஏற்படுத்தியுள்ள ஒழுக்கம் சரியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதேபோல் ஒரு கூட்டத்தின் ஒழுக்கம் பிற கூட்டத்தின் ஒழுக்கத்தைவிட சிறந்ததாக இருக்கும் என்றே நம்புகிறோம்.


முதலில் நம்மை நாம் சுயசோதனை செய்யவேண்டும். நாம் செயல்படும் தன்மை எத்தகையதாக உள்ளது என்பதை ஆராய வேண்டும். *இன்று இந்த வாழ்வை நமக்கு உரிமையான ஒன்றாக மகிழ்கின்றோமா? அல்லது பாரம்பரியம் என்ற பெயரால் கொள்கை கோட்பாடுகளை சுமந்து அடுத்தவருக்கும் நமக்கும் இனிமையல்லாத வாழ்வை வாழ்கின்றோமா? என்று அலசிப்பார்க்க வேண்டும்.*


இந்த நாள் இனிய நாளாக இருக்க வேண்டி நாம் செய்யும் செயல்களால் நமக்கும் அடுத்தவருக்கும் இனிய சூழல் உருவாகியுள்ளதா என்பதை உணர வேண்டும். 


*இன்று நாம் நம்மை உணர முடிந்தால் எதிர்காலம் ஒளிரும்.*


*முற்றும்*