• +91 97102 30097
  • reach@yogakudil.org

கடவுள் இருப்பின் இருக்கின்ற இடம் எது?

நாம் இருக்கிறோம் என்பதே கடவுள் இருக்கிறது என்று அர்த்தம். நமக்குள் நம்மை கடந்த ஒன்று இல்லையென்றால் நம்மால் இயங்கமுடியாது. ஆனால் நமக்கு கடவுள் என்ற ஒன்றை தனி சக்தியாக எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் பொருளாக போதித்து இருக்கிறார்கள்.

போதித்ததை கடந்து புரிந்து கொள்ள முயலுங்கள். கடவுள் இருக்கிறது என்பதற்கு ஆதாரம் நீங்கள் தான். நீங்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறது.

ஆலயத்தில் இருப்பதாக நம்புகிறார்களே அது கடவுளா? தெய்வமா? விளக்குங்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்-திருக்குறள்.

சிறந்த மனிதர்களை கொண்டாடுவது மனிதர்களின் பண்பாக இருப்பதால் உலகில் சிறந்த மனிதர்கள் தெய்வமாக மதித்து வணங்குவது நடைமுறையாகியுள்ளது. அவ்வகையில் நம்மால் சரியாக அறிய முடியாத காலத்து சிறந்த மனிதர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் கோயில்கள் அல்லது ஆலயங்கள்.

ஆலயத்தில் இருப்பது தெய்வங்கள். கடவுள் என்றும் மாறாமல் எப்பொழுதும் புதிதாகவே இருப்பது. கடவுள், தெய்வம் இரண்டும் ஒன்றல்ல.

கடவுள்தான் இந்த அண்டத்தை உண்டாக்கினார் என்றால் கடவுளை உருவாக்கியவர் யார்? எது?

எல்லாவற்றிற்கும் ஆதாரம் எது! என்று ஆராய்வதால் மனிதன் தனிச்சிறப்பு மிக்க மிருகமாக இருக்கிறான். அவனது அந்த சிறந்த பண்பே அவனை உலக உயிர்களிலெல்லாம் உயர்ந்த உயிரினமாக மாற்றியது.

நான் என்ற ஒன்றே நமக்கு ஆதாரம். அது எப்படி இருக்கிறது? என்று அறிவதே ஞானம். காரணம் நமக்குள் இருக்கும் ஆதாரப்பொருளே உலகத்திற்கும் அதாவது அண்டத்திற்கும் ஆதாரம்

உண்மையான துறவு எது?

தூங்கும் பொழுது இருக்கும் நமது இருப்பு நிலையே துறவு. அங்குதான் நான் என்ற அகந்தை ஒழிந்து அமைதியாக இருக்கிறது. ஆடை உடலில் இருக்கிறதா? பிறர் நமம்மை மதிப்புடன் நடத்துகிறார்களா? நமது உறக்கம் அடுத்தவரை தொல்லை தருகிறதா? என்ற கேவல சிந்தனை குறைந்திருக்கிறது.

அத்தகைய எண்ணங்களற்ற மனநிலையை விழிப்பு நிலையில் அடையும் ஒருவரே சரியான துறவி.

உலகம் பலவித மாறுதல்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது?

மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது. இதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவதும், அத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.

ஒரு மனிதன் நல் ஒழுக்கத்துடனும், அவனுக்கு அவன் உண்மையுடனும் வாழ்ந்து வருகிறான் என்றால் அவனுக்கு கடவுள், தெய்வம், வழிபாடு, ஆன்மீக பயிற்சி இவையெல்லாம் தேவையா?

திருடன், பதுக்கி வைத்துக்கொண்ட பொருட்களை எடுத்துக்கொண்டேன் இதில் என்ன குற்றம் இருக்கிறது? என்று நியாயப்படுத்தும்போதும். ஒரு ஏமாளி தன் உழைப்பால் விளைந்த அனைத்து பொருட்களையும் தனது எஜமானனுக்கு கொடுத்துவிட்டு தன் குடும்ப உறவுகளை பட்டினியில் வாடவிட்டு இறைவன் எனக்கு இட்ட கட்டளை என்று இருமாத்துக் கொள்ளும்போதும். அவர்களுக்கு அவர்கள் உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கிறார்கள் ஆயினும் இது சரி என்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

தன்னை தான் யார்? என்று அறியாமல் ஒழுக்கத்துடனும், உண்மையுடனும் வாழமுடியாது. தனக்குள் இருப்பது *கடவுள்*, தன்னையறிய உதவும் ஒருவர் *தெய்வம்*, அவர் தரும் போதனைகள் *ஆன்மீக பயிற்சிகள்* என்று உணர்ந்துவிட்டால் அல்லது இப்படியான ஒருவராக நீங்கள் இருந்தால் கடவுள், தெய்வம், வழிபாடு, ஆன்மீக பயிற்சிகள் இவைகள் எதுவும் தேவையில்லை.

துறவறத்திற்கு இல்லறம் தடையா?

இல்லறம் என்பது நல்லறம் ஆகும். துறவியை பூமியில் தவழச் செய்தது இல்லறம்.

எண்ணங்களற்ற மனநிலையை அடைய குடும்பம் தடை என்று எண்ணியே துறவு மேற்கொள்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கும் உணவு தந்து வாழச்செய்வது இல்லறந்தான் பண்பாக இருக்கிறது.
இல்லறம் இயற்கையானது. துறவறம் தூசு படிந்த கண்ணாடியைப் போன்றது. இல்லறந்தானே இறைவனை எளிதில் அடைய முடியும். துறவத்திற்கு இல்லறம் தடையில்லை.

ஒரு நல்ல குருவை அடையாளம் காண்பது எப்படி?

அனுபவமில்லாமல் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது அனுபவிப்பவரின் தன்மையைப் பொறுத்தும் அது மாறுகிறது. எப்பொழுது நம்மை நமக்கு அடையாளப்படுத்துகிறாரோ அப்பொழுது ஒருவர் நமக்கு குருவாக மாறுகிறார்.

பளபளக்கும் ஆப்பிள் சில புளிப்பதும் உண்டு. கரடுமுரடாக இருக்கும் சீதாப்பழம் இனிப்பதும் உண்டு. அனுபவம் தரும் வரை குருவாக ஏற்பது நல்லதல்ல.

விதி என்றால் என்ன?

இயற்கையின் ஒழுக்கமே விதி, சூரியன் உதிக்கும் திசை கிழக்கு அல்லது கிழக்கு திசையில் சூரியன் உதிக்கின்றது.

 
எந்த ஒரு செயலுக்கும் அடிப்படையான தர்மம் என்ற ஒழுக்கம் இருக்கவே செய்கின்றது. அதை மாற்றும் தகுதி யாருக்கும் இல்லை. ஆனால் அதை புரிந்து கொண்டு அதனுடன் ஒத்திசைவு கொள்ளலாம்.
 

மறுபிறவி உண்டா எதற்கு ஏன்?

உண்டு. காரணம் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தவே இயற்கையின் விதி அப்படி இருக்கிறது. ஒரு உயிர் தோன்றி அது பல நிலைகளை கடந்து தனக்குள் ஒரு நிறைவை அடைத்து தோன்றிய இடத்திற்கு மீண்டும் செல்கின்றது.

 
அப்படி அது அதன் வழிகளை கடக்கும் பொழுது அது செய்த விளைவுகளுக்கு ஏற்ப அனுபவம் பெறுகிறது. பரிபூரணத்தை உணரும் வரை அதன் ஆசைகள் அடங்காமல் தொடர்வதால் பிறவிகள் தொடர்கின்றது. 

காதல், காமம் இரண்டும் ஒன்றா ஒன்றில் ஒன்று ஒளிந்து கொண்டு இருக்கிறதா?

ஆம். மற்ற உயிரினங்கள் போல் தேவைக்காக மட்டுமில்லாமல் அன்புடன் ஆழ்ந்த பகிர்தலோடு இருக்கும் பண்பினை மனிதன் அடைந்துள்ளான்.

 
எனவேதான் காமம் கலந்து அன்பு செய்வதை காதல் என்றும் ஏழை மீது அன்பு கொள்வதை இரக்கம் என்றும் பலதரப்பட்ட வகையில் பிரித்துப் பார்க்கிறான்.
 
காதல் காமம் கலந்த அன்பு, காமம் சுய தேவைக்காக மட்டுமே இருந்தால் அது வெறி மற்றும் உடல்தேவை மட்டுமே. காதலோடு காமம் இருப்பினும் காதல் புனிதம். காமம் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது.

ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவர் அசைவ உணவு உண்ணக்கூடாது என்று சொல்கிறார்கள் சரியா?

ஆன்மீகம் அற்ற ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. புலி, சிங்கம் போன்ற விலங்குகளை படைத்ததுதான் நம்மையும் படைத்தது. 

 
மனிதன் தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள தன்னை ஆன்மீகவாதி என்று பிரகடனப்படுத்துகிறான். மேலும் சில சடங்குகளையும், வாழ்வியல் சட்டநெறி முறைகளையும் வகுத்துக் கொள்கிறான்.
 
உண்மையில் *சைவம் என்பது கடவுள் எனக்குள் என்று உணர்வது. அசைவம் என்பது கடவுள் வேறு எங்கோ ஒரு இடத்தில் இருப்பது என்று உணர்வது.*
 
உணவில் சைவம், அசைவம் என்பது தேவையற்றது. பிடித்தது, பிடிக்காதது என்று ஏற்டுத்திக் கொண்டு உங்கள் வசதிக்கு ஏற்ப உண்ணலாம்.
 
உணவு என்பது நமக்காக இறைவன் படைத்தது இல்லை. நமது தேவைக்கு நாம் உணவாக சிலவற்றை தேர்ந்தெடுக்கிறோம். எந்த உணவும் அதன் இனத்திற்காக, அதன் இனவிருத்திக்காக மட்டுமே வாழ்கின்றது நாமம் அதை உணவாக உட்கொள்கிறோம்.
 
உடல் செரித்துக் கொள்ளும் உணவினை செரித்துக் கொள்ளும் அளவிற்கு உண்பது நல்லது. *உடலைவிட சிறந்த அறிவாளி யாரும் கிடையாது.*

உணவே மருந்து மருந்தே உணவு விளக்குக

பசி என்பது மனிதனுக்கு ஏற்படும் நோய். எனவேதான் உணவே மருந்து. பசி என்பது இல்லாமலேயே உணவு உட்கொள்வதால் நோய் ஏற்படுகிறது. இதற்கு மருந்தே உணவு பசித்த பிறகு உண்ணுவதே சாலச்சிறந்தது.

 

எந்த அளவிற்கு குறைத்து உண்ணுகிறோமோ அவ்வளவு ஆரோக்கியம் பெருகுகிறது என்கிறார்களே உண்மையா?

அளவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அதிகம் உழைப்பவர் அதிகம் உண்ண வேண்டும் அல்லது சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். உடல் ரீதியிலான உழைப்பு குறைவாக இருப்பின் உணவு குறைவாக இருப்பது ஆரோக்கியம்.

 

செல்வவளம் மிகுந்தவர்கள் அனைவரும் கடவுளின் ஆசி பெற்றவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

கடவுளின் ஆசி இல்லாத ஒன்று இந்த உலகில் இருக்க முடியாது. உலகில் உள்ள அனைத்தும் கடவுளின் விருப்பத்தால் ஆனது. செல்வவளம் என்பது புறச்சூழல். தனது கடின உழைப்பால் அல்லது மூதாதையர்களின் சேமிக்கும் பண்பால் ஏற்படுவது மட்டுமே இருப்பினும் தனிமனித முயற்சி இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றது.

 

பாவ புண்ணியம் உண்டா?

பகுத்தறிவுள்ள மனிதனுக்கு பாவபுண்ணியம் உண்டு. எதை எப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற பலவிதமான கேள்விகளுக்கு பின் ஒன்றை புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தும் மனிதன் தன் முழு அறிவால் அறிந்து கொண்டதுதான் பாவபுண்ணியம் என்கின்ற நன்மை தீமை.

 

பிள்ளையார் சிலையின் தத்துவம் என்ன?

ஒன்றை சரியாக விளங்கிக்கொள்ள போதிய அறிவு நமக்கு வேண்டும். பெரும்பகுதி விளக்கம் தரமுற்படும் மனிதர்கள் தாங்கள் கேள்வி அறிவைக் கொண்டே விளக்கம் தருகிறார்கள். அனுபவ அறிவு என்பது அரிதாகவே உள்ளது.

 
பொதுவாக இந்து மதம் என்ற தொகுப்பு பலதரப்பட்ட சிலை வடிவங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.  அதில் ஒன்று பிள்ளையார் சிலை அது ஒரு விளக்கப்படம். அதாவது குறியீடு மட்டுமே. கோயில்கள் உண்மைக்கான விளக்கக் குறியீடுகளை சுமந்து வரும் பக்தர்களின் அறிவினை விளக்குகின்றது. 
 
பிள்ளையார் சிலையை சரியாக பார்க்க அதன் தன்மை புரியும். மேலும் புதிய சிலைகள் புரிதல் இல்லாத சிற்பிகளால் வடிவமைக்கப்படுகிறது. உதாரணம் அண்மைக்காலத்தில் கண் திருஷ்டி பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அதன் எழிலினை கெடுத்தூவிட்டார்கள்.
 
பிள்ளையார் சிலை யோகச் சாதனைக்கு அதாவது இறைவனை நோக்கி பயணிப்பவர்களுக்கு முதல் வடிவமாகும் அது யோகப்பயிற்சிகளை செய்யும் முறைகளை விளக்குகிறது. யானையின் தோற்றம் என்பது தும்பிக்கையின் பலமே யானைக்கு ஆதாரம். மூச்சுக்காற்றின் பலமே மனிதனுக்கு ஆதாரம். இதனை உணர்த்தவே தும்பிக்கை உள்ள யானையின் உருவத்தை முதல் தெய்வமாக வைத்தார்கள். மேலும் சுவாசம் எப்பக்கம் இருத்தல் அவசியம் என்பதை உணர்த்த தும்பிக்கையை அப்பக்கம் வளைத்து அமைத்தார்கள்.
 
மேலும் ரகசிய விளக்கங்கள் பல இருக்கின்றன. அவரவர் புரிதலுக்கு ஏற்ப விளங்கிக் கொள்வது அவரது விருப்பம். அனுபவ அறிவினை பெறுவதைத் தவிர இதற்கு தீர்வு இல்லை.

மகான்கள் எல்லாம் பல இன்னல்களை கடந்த பிறகே ஞானம் பெற்றதாக அறிகிறேன் இது ஏன்?

ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கும் பலவிதமான அனுபவங்ள் அவசியமாகின்றன. அப்பொழுது அவன் துன்பத்தின் அசல் தன்மையை அறிந்து அதனை வெற்றிபெறும் வழிகளை கண்டுபிடிக்கிறான்

 
அவ்வகையில் அநேகம் பேர் வெளிப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் தனது துன்பத்திற்கு தான்தான் காரணம் என்பதையே அவர்கள் அப்போதுதான் அறிகிறார்கள்.
 
எனவேதான் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று கூறுகீறார்கள். நான் என்ற அகந்தையை உண்மைக்கு சமர்ப்பிக்கும் உத்திகளை மக்களுக்கு போதிப்பதற்கும் இதுவே அடிப்படை. இதை புரிந்து கொள்ளும் ஒருவன் இன்னல்களையும் தன் அறிவால் அறிந்து அதிலிருந்து விடுபடும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு நான்தான் சாமி என்றும் சத்தியம் சொல்கிறது என்று கூறி காம களியாட்டங்களில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபடுகிறார்கள், இவர்களை விமர்சித்தால் சண்டைக்கு வருகிறார்களே என்ன செய்வது

கடவுள் என்து அனுபவம். அதை அனுபவிக்கும் தகுதி எல்லா மனிதர்களுக்கும் இல்லை. மேலும் கடவுள் பற்றிய புரிதல்கூட நமக்கு சரியாக இல்லை. கடவுள் பற்றிய விளக்கம் தரும் மனிதர்கள் கடவுள் அனுபவம் அடைந்தவர்களாக இருப்பதில்லை.

 
தன்னை தெய்வீக பண்புகளால் நிரப்பிக் கொள்ள மட்டுமே மனிதனால் முடியும் என்று நம்புகிறான். எனவே சில உயர்ந்த இடத்தை அடைந்தவர்களுக்கு அடிமையாக மட்டுமே இருக்க முடியும் என்று தன்னைத்தானே முட்டாளாக மாற்றிக் கொள்கிறான்.
 
ஒருவன் தன்னை சாமியாராகவோ, திருடனாகவோ நினைத்துக் கொள்வது அவரது விருப்பம். அவரை பின் தொடர்வது தனிமனித சுதந்திரம், இருப்பினும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் கண்டால் விமர்சிக்காமல் இருக்க முடியாது.
 
இன்றைய உலகில் விமர்சனம் தவிர்க்க முடியாத ஒன்று. இதுகுறித்த சண்டை போடுவது நல்லதல்ல, உண்மையை உணர நினைப்பவர்கள் நிதான நிலையில் எதையும் புரிந்து கொள்ள முயலுவார்கள்.

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தம் என்பது மனித மனம் வெளிப்படுத்தும் ஆற்றல். அதாவது சிந்தையின் தெளிவு. ஒருவர் தன் சுய் சிந்தனையின் மூலம் ஒரு கருத்தை நடைபெற செய்வது. ஆண்டவன் சித்தம் என்பது முன்னோர்களின் அறிவு வெளிப்பாடு. அத்தகைய ஆற்றல் மிகுந்த யாராலும் மாற்றி திரித்து கூற முடியாத கருத்தை கூறியவர் சித்தர் எனப்படுவர்.

 
அவ்வகையில் நமது தமிழகத்தில் வாழ்ந்த அறிவு மிகுந்த மக்களை சித்தர்கள் என்று அழைப்பார்கள்.

கிரிவலம் வருவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

கிரிவலம் இன்று அநேக மனிதர்கள் கடைபிடிக்கும் ஒரு செயலாக இருக்கிறது. நடைபயிற்சி செய்வதால் எந்த மாதிரி நன்மைகள் உண்டோ அந்தமாதிரி நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

 
*உண்மையில் கிரி என்பது மறைபொருள். எனவேதான் வேதகிரி என்று அழைப்பார்கள். வேதகிரியை வலம் வருவது ஆன்மீகம். வெறும் கிரியை வலம் வருவது உடல் ஆரோக்கியம்.*
 
மற்றபடி கிரிவலத்திற்கு செல்வதால் எந்தவிதமான ஆன்மீக அனுபவம் அடைவதற்கு வாய்ப்புகள் இல்லை. மேலும் ஒத்த சமயத்தில் அநேக கூட்டம் கிரிவலம் வருவதால் நெருக்கடியான சூழ்நிலையில் மனம் வேதனை அடையவே செய்யும்.

தவம், தியானம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா?

தவம் என்பது வாழ்வது, தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட விதத்தில் செய்வது.*

 
தவம் செய்வார் தன் கர்மம் செய்வார் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவே பக்திபூர்வமான, ஆழ்ந்த புரிதலோடு வாழ்கின்ற வாழ்வு தவவாழ்வு.
 
தியானம் என்பது ஒன்றை அறிய செய்யப்படும் முயற்சி. எண்ணங்கள் அற்ற மனநிலை அடைவதற்கு ஒருவர் மேற்கொள்ளும் உத்திக்கு பெயர் தியானம் எனப்படும். அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளை ஆழ்ந்து கவனிப்பதும் தியானம் என்று அழைக்கப்படும்.
 
யோகம் அடைய முயலும் ஒருவரின் ஏழாவது நிலை தியானம் எனப்படும். 
 
தவம் என்பது தன் வாழ்வை செம்மையாக அமைத்துக் கொண்டு பிறவிப்பயன் அடைவதற்கு ஏற்ப செயல்களை செய்வது.

பசுவின் உடலில் 108 தெய்வங்கள் இருப்பதாக கூறுகிறார்களே இது உண்மையா?

பணம் பத்தும் செய்யும் என்பதை கேள்வியுற்றவராக நீங்கள் இருந்தால் 

அடியேன் பதில் நிறைவை தரும். இல்லையென்றாலும் பணம் பத்தும் செய்யும் என்ற வழக்கு மொழி இருப்பதை முதலில் அறியுங்கள்.
 
மாடு ஒரு காலத்தில் பணத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு இருந்தது. எனவேதான் மாடு என்பது செல்வத்தின் மறுபெயராக அழைக்கப்பட்டது.
 
கல்வி ஒருவருக்கு மாடல்ல - என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். பணம் பத்தும் செய்யும் என்றால் மாடு பணத்தைப்போல் பத்தை செய்யும் என்று விளக்கவே, பசுவின் உடலில் 108 தெய்வங்கள் வாழ்வதாக கூறியிருக்கிறார்கள்.
 
மற்றபடி மாட்டில் 108 தெய்வங்கள் வாழ்வதில்லை. மாடால் 108 தெய்வங்கள் வாழ்கின்றன. தெய்வம் என்றால் என்ன என்பதை நீதான் கடவுள் புத்தகம் படித்து அறிந்து கொள்ளவும்.

கோபப்படுபவன் ஆன்மீக சாதனையில் முன்னேற முடியாது என்பது உண்மையா? / அல்லது / கோபப்படுபவன் ஞானியாக இருக்க முடியாது என்பது உண்மையா?

கோபம் என்பதற்கு சரியான அர்த்தம் யாருக்கும் கூற முடியாது. பொதுவாக உணர்வுகளை வரையறுக்கும் வார்த்தைகள் போதுமானவைகள் அல்ல. 

 
மனிதன் எல்லாவற்றையும் வார்த்தையில் கொண்டுவர முயன்றிருக்கிறான். ஆனால் அது மமுழுமையடையவில்லை. மேலும் மனிதனுக்கு மனிதன் உணர்வு நிலையில் மாறுபாடுகள் உள்ளன. எனவே எதையும் அதாவது எந்த உணர்வு கலந்த செயல்களையும் துல்லியமாக கூறவியலாது.
 
கோபம் என்பது மனிதனின் அடிப்படை உணர்வு. ஏன் எல்லா உயிர்களும் தன்னை பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் சீதனமாக கொடுக்கப்பட்டது.
 
புழு எறும்புகளின் கடியை எதிர்க்க நெளிவது கோபத்தால். கோபம் என்பதை அறிவின் அளவிற்கு ஏற்ப எல்லா உயிர்களும் வெளிப்படுத்தும். 
 
ஆன்மீகம் என்பது ஒரு குதிரை சுதந்திரமாக வாழ்வது. மேலும் அது தனது எஜமானனுக்கு கட்டுப்படாமல் எஜமானருடன் ஒத்திசைவு கொள்வது. ஞானமாக இருப்பது. கோபத்தை அடக்க குதிரைக்கு கடிவாளம் போடும்பொழுது குதிரை தன் சுதந்திரத்தையும் இழந்து, தன் தலைவனுடன் ஒத்திசைவு கொள்வதையும் தவிர்த்துவிடுகிறது.
 
அதுபோலவே கோபம் தவறு என்று போதிக்கப்படுவதால் மனிதன் தன் இயல்பை அழித்துவிடுகிறான். மாறாக கோபத்தின் தன்மையை அறிந்து அதை ஆளப்பழகும்பொழுது தடையற்ற மனநிலையுடன் ஞானியாகிறான்.
 
கோபம் என்பது ஆன்மீகத்திற்கு தடையில்லை, மாறாக ஆன்மீகவாதி கோபத்தின் அசல்தன்மையை மடைமாற்றி இன்பத்தின் உச்சத்திற்கு செல்கிறான்.
 
எனவே, ஞானி கோபப்படும் சூழ்நிலை குறைவாக மாறிவிடுகிறது அல்லது கோபப்படும் சூழ்நிலையை ஞானி தவிர்த்துவிடுகிறார்.

தனி மனிதன் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழ என்ன செய்ய வேண்டும்?

தனக்கு தானே உண்மையோடு இருப்பின் நிம்மதியாக இருக்க முடியும். தனது தேவைகளுக்காக பிறரின் தேவையை பூர்த்தி செய்பவன் ஆனந்தமமைகிறான். எனவே உண்மையோடு உழைப்பவன் நிம்மதியோடும் ஆனந்தமாகவும் வாழ்கிறான்.

கடவுளின் பெயரால் விரதம், உடலை வருத்தி அலகு போடுதல், தீ மிதிதத்தல் இது போன்றவைகள் அவசியம் தேவையா?

மனிதனின் ஆறாம் அறிவால் ஏற்படும் இன்னல்கள் இவை. கடவுளை கற்பித்துக் கொண்டு சடங்குகளை ஏற்படுத்திக்கொண்டு நாம்தான். இதற்கு உண்மை அல்லது கடவுள் எவ்வகையிலும் பொறுப்பாகாது. தான் செய்த கரும வினையின் பொருட்டு தனக்குத் தானே தண்டித்துக் கொள்ளவே இத்தகைய ஏற்பாடுகள் இருக்கின்றன. 

 
அவசியம் அவசியமில்லை என்பது தனி மனித புரிதல் பொறுத்து அமைகிறது. என்னை பொறுத்தமட்டில் இவை தேவையில்லை.

தீராத வியாதிகள் ஒருவருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இருப்பது ஏன்?

கரும வினை, முன் செய்த பாவமே அல்லாமல் வேறொரு காரணம் இல்லை. இருப்பினும் அவைகளிலிருந்து விடுதலை பெற முடியும்.

மனிதன் மனிதனை மதிக்க வேண்டும் என்று ஏன்? எப்படி தோன்றியது?

மனிதன் பிறவற்றை அறிந்து அதற்குத்தக்க மதிப்பளிப்பதில் சிறந்தவன். எந் எந்த பொருளுக்கு எவ்வளவு மிதப்பு அளிக்க வேண்டும் என்ற கணக்கை என்றோ அறிந்திருக்கிறான்.

 
இருப்பினும் அவனது கணக்கு சரியானதாக இருக்கிறதா? என்றால் இல்லை. இன்னும் அவ்வகையில்தான் மனிதன் குணத்தின் தன்மை பொறுத்து மதிக்கிறான். உண்மையானவன் எல்லாவற்றையும் மதிக்கிறான். கற்றுக் கொண்டவன் கணக்கு போட்டு மதிக்கிறான். மதிப்பது மனிதனின் இயல்பு.

பேய், பிசாசு, பூதம் இவைகள் உண்டா? இல்லையா?

உண்டு. உடலற்ற மனம் பேய், அதாவது மெய் என்ற உடம்பு இல்லாமல் பொய்யான உடம்பை பேய் என்று அழைப்பர். மனம் பேதலுற்ற நிலையே பிசாசு. பிசாசு பிடித்தவன் என்ற வாக்கியத்தை கேள்வியுற்று இருப்பீர்கள். பேய் அடுத்தவரை தாக்கும் தன்மையுடன் இருந்தால் அது பிசாசு.

 
பூதம் என்பது பெரியது என்ற பொருளும் உண்டு. உலகில் பெரியது காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவை பூதம் என்று அழைக்கப்படுகிறது.

சாமியார் என்ற வார்த்தை தற்பொழுது சமூகத்தில் இழிவு படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் சாமியார் என்பவர் யார்?

 à®šà®¿à®²à®°à¯ˆ சில வார்த்தைகளால் அடையாளப்படுத்துகிறோம். அந்த சிலர் செய்யும் அசிங்கத்தினால் அந்த சில வார்த்தையும் அசிங்கப்படுகிறது.

 
*உண்மையில் சாமியார் என்பவர், சாமி எது? யார் சாமி? எது நமக்கு மூலமாய் இருக்கிறது என்று கேள்விகளை எழுப்பி அதற்கு விடை கண்டவர் சாமியார் எனப்படுவார்.*
 
முற்காலத்தில் இத்தகைய கேள்வியுடன் பதிலை தேடும் மனிதர்கள் துறவிகளாய் இருந்தார்கள். எனவே துறவிகளையும் சாமியார் என்றே அழைப்பார்கள். இன்று துறவியாக தன்னை காட்டிக் கொள்ளும் சுகவாசிகளை சாமியார் என்று மக்கள் அழைக்கின்றார்கள். சுகவாசிகளின் அசிங்கம் அவையில் அரங்கேறும் பொழுது சாமியார் என்ற வார்த்தை கொச்சைப்படுகிறது.

ஞானி என்பவருக்கும், யோகி என்பவருக்கும் என்ன வித்தியாசம்?

ஞானம் என்றால் அறிவு. யோகம் என்றால் கூடுதல். ஞானி என்பவர் அறிவால் உணர்கிறார். அவர் தனக்கு மூலமாவது இப்படி இருக்கும் என்று அறிகிறார்.

 
யோகி என்பவர் தனக்கு மூலமான ஒன்றுடன் கூடி மகிழ்கிறார். மூலத்தின் அசல் தன்மையை தனது முயற்சியால் அடைந்து மகிழ்கிறார். இத்தகைய நிகழ்வே யோகமடைதல் எனப்படும். மேலும் இதை ஞானமடைதல் என்றும் கூறலாம் காரணம் ஞானத்தை கடக்கின்ற நிகழ்வு இங்கே இருக்கிறது.

நான் கடவுளை உணர்ந்தவன் என்று பலரும் சொல்கிறார்கள். உண்மையில் கடவுளை உணர்ந்த ஒருவரை எவ்வாறு அடையாளம் காண்பது?

நான் காதலிக்கிறேன் என்று ஒருவர் பொய் சொன்னால் நம்மால் கண்டுபிடிப்பது அரிது. நாம் காதலித்திருந்தால் அதன் தன்மை பொறுத்து அறியலாம். இருப்பினும் முழுமையாக புரிந்து கொள்வது அரிது.

 
 à®•à®Ÿà®µà¯à®³à¯ˆ உணர்ந்தவன் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். நான் இருக்கிறேன் என்று உணர்வு பெறுகிற அனைவரும் இதனை உரைக்கலாம். கடவுளை உணர்ந்தவருக்கு அடையாளம் தேவையில்லை.
 
ஆனால் ஞானமடைந்தவர், யோகமடைந்தவர் என்று வரும் பொழுது அடையாளங்கள் இருக்கின்றன. தேவர்கள் கண் இமைப்பது இல்லை. ஞானமடைந்தவன் கண்கள் அதிகமாக இமைப்பதில்லை. அவனுக்கு எப்பொழுதும் ஒரு நாதம் கேட்டபடி இருக்கும். ஆகையால்தான் இறைவனை இசைவடிவானவன், நாதவடிவானவன் என்றும் அழைப்பார்கள்.
 
எண்ணத்தில் ஓட்டம் குறைந்துவிடுவதால் ஆசைகள் குறைந்து அமைதியான மனநிலையுடன் தெளிவாக இருப்பார்கள். எதற்கும் அசராத போக்கும், எதையும் விமர்சிக்கும் அறிவும் மேலோங்கி இருக்கும். அதே சமயத்தில் எளிமையான, இயல்பான, சராசரியான வாழ்வை நேசிப்பார்கள்.
 
*இருப்பினும் ஞானமடையாத ஒருவர் ஞானமடைந்த ஒருவரை அடையாளம் காண்பது அரிது.

தற்சமயம் உயிரோடு இல்லாத வாழ்ந்து முடித்த ஒருவரை குருவாக ஏற்கலாமா?

சீடன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருப்பவன். குரு மனதை கடந்து அமைதியை அடைந்தவர். அமைதியை அனுபவிக்கும் மனிதனிடம் சென்று அவனது அசல் அனுபவத்தை அறிந்து தானும் அடைவது எளிது.

 
உடல் கடந்த ஒருவர் உங்களுக்கு உதவுவது அவ்வளவு எளிதல்ல. அவரது படைப்புகளில் கிடைக்கும் அனுபவத்தினை நீங்கள் அறிந்து அனுபவிப்பதும் எளிதல்ல.
 
படைப்பாற்றல் இல்லாத அனுபவம் மிக்க குரு உங்களுக்கு உதவுவது போல் குருவின் (இறந்தவரின்) படைப்பு உங்களுக்கு உதவாது.
 
உங்களால் உயிரோடு ஒரு குருவை அடைய முடியாவிட்டால் வாழ்ந்து முடிந்த குருவின் படைப்புகளைக் கொண்டு அடைய முற்படலாம். அதற்கு போதிய அறிவும், அமைதியும் அவசியம்.
 
பொதுவாக உயிரோடு இல்லாத வாழ்ந்து முடித்த ஒருவரை குருவாக ஏற்பது நல்லதல்ல. கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் உங்களுக்கு உதவாத பொழுது உங்களை நீங்கள் எப்படி வழி நடத்தப் போகிறீர்கள் என்பது உங்களது புரிதலோடு இருக்கிறது.
 
தனிமனித திறன் பொறுத்தே இது அமைகிறது.