• +91 97102 30097
  • reach@yogakudil.org


சல்லாப சாமியார்கள்

 

காக்கி சட்டை போட்டால் காவலாளி, காவி துணி அணிந்தால் சாமியார், அக்கடான்னு உடை போட்டா துக்கடான்னு நினைச்சா அது உங்க தப்பு. சாமியார்சள் யார்? ஏன் சாமியார்கள் சில்மிஷத்தில் சிக்குகின்றார்கள். எங்கே இதற்கு ஆதாரமான செயல் நடக்கிறது.


மனிதன் தன்னை ஏன் தனித்துவம் வாய்ந்தவனாக காட்டிக் கொள்கிறான்? அல்லது மனிதனை ஏன் தனித்துவம் வாய்ந்தவனாக பார்க்கிறோம்? 


பொதுமறை அழகாக உரைக்கிறது.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


972 திருக்குறள்.


பிறப்பின் அடிப்படையில் உயிர்கள் ஒத்தே இருக்கிறது. அவைகளுக்குள் எந்த பேதமும் இல்லை. சிறப்பு என்பது ஒத்து இருக்காது காரணம் செய்யும் தொழில் மாறுபடுவதால் என்கிறது திருக்குறள்.


தனக்கு சிறப்பு வேண்டும் தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு நாம் நமக்கு பெருமை சேர்க்கும் திட்டத்தோடு நமது அறிவை வளர்க்கிறோம்.


எப்படி ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை சமூகத்தில் மதிப்பு மிகுந்தவனாக மாற்றிக்கொள்ள நினைக்கிறானோ, அப்படி சாமியார்களும் தன்னை சமூகத்தின் அங்கத்திற்கு உட்படுத்துகிறார்கள்.


உளவியல் தந்தை என்று அழைக்கப்பட்ட சிக்மென்ட் பிராய்டு மனிதனின் அத்தனை செயல்களுக்கும் அடிப்படை காரணம் அவனுள் எழும் அதாவது அவனுக்குள் இருக்கும் காமவேட்கையே என்று உறுதிபடுத்தினார்.


தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு அடிப்படைக் காரணம் இனக்கவர்ச்சிக்காக என்பது சிக்மென்டின் ஆராய்ச்சி. அப்படியானால் எல்லாரும் தனது காமத்தின் இச்சைக்குத்தான் தன்னை பெருமிதமாக நினைக்கிறார்களா? என்ற கேள்வி எழக்கூடும். இதில் ஒரு பகுதி உண்மைதான். ஆயினும் அதுமட்டுமே முழுமையன்று.


உடல் சார்ந்த தேவைக்காக மனிதன் செயல்படுகிறான். அவ்வகையில் உடல் காமத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. எனவே காமம் சார்ந்து அல்லது அடிப்படையாக வைத்து அவனது செயல்கள் இருக்கும்.


சாமியார் என்பவன் மனிதன். மனிதன் தனது ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முயற்சி செய்வான் என்பது உறுதி. சாமியாருக்கு காம இச்சை இருக்கும்.


இருப்போருக்கு இதுதான் சொந்தம், இல்லாதாருக்கு எல்லாம் சொந்தம். சாமியார் தனது காம இச்சையை தீர்த்துக் கொள்ளவே துறவு என்ற பெயரில் தன்னை வெளிப்படுத்துகிறான். அப்பொழுதுதான் அவனுக்கு பலதரப்பட்ட பெண்களுடன் உறவு கொள்ள ஏதுவான சந்தர்ப்பம் அமையும்.


உண்மையில் உடல் இச்சை துறந்தவனுக்கு இருப்பிட வேட்கையும், உல்லாச வாழ்வும் அவசியமன்று. அறையில் இருக்க நினைக்கும் ஒருவன் துறவியாக இருக்க முடியாது.


*வெட்டவெளியில் தங்கி, பசிக்கும் பொழுது பிச்சை பெற்று, மரணத்திற்கு காத்திருக்கும் பிணமே உண்மையான சாமியார்.*


சொகுசு கார், சேவை புரிய வேலையாட்கள், வசதியை தக்க வைத்துக்கொள்ள போதனை வகுப்புகள் இவை துறவின் பண்பு அன்று.


மற்றும் தொடர்பாடெவன் கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.


345 திருக்குறள்.


உடம்பும் துறவிக்கு மிகையானது என்கிறது திருக்குறள். ஆனால் இன்றோ இந்த திருட்டு சாமியார்கள் தனது சல்லாப கூத்துக்கு தகுந்த இடமாக ஆசிரமம் கட்டி விதவிதமான விளையாட்டுக்களை நடத்துகிறார்கள்.


மக்கள் கூட்டமும் பொழுது போக்கும் இடத்திற்கு ஏதுவானதாக அத்தகைய ஆசிரமத்தையே நாடுகிறார்கள். 


புதிய மனிதர்களின் சந்திப்பு, வேடிக்கையான பொழுதுபோக்கு, வித்தியாசமான பயிற்சிகள், குடும்ப சூழலில் இருந்து புதிய (பிக்னிக் ஸ்பாட்) வசதியான இடம் என பலதரப்பட்ட அம்சங்களுக்கு வசப்பட்டு செல்கிறார்கள்.


மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட தனி மனிதர்கள் சாமியார்களாக மாறி மக்களுக்கும் தங்களுக்கும் சொகுசான வாழ்வை அளிக்கிறார்கள்.


மனிதனின் மனதில் இருக்கும் காம இச்சையை தூண்டி பணம் பண்ணுவதையே கலை உலகம் செய்கிறது. அதைப் போலவே இந்த சல்லாப சாமியார்கள் ஆன்மீகம் என்ற போர்வையில் உல்லாச மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்ய இத்தகைய ஆசிரமங்களை அமைக்கிறார்கள்.


அன்பு உள்ளங்களே, இவர்களின் தேவை ஒருபுறம் இருக்கட்டும். உங்களின் தேவை அதுவல்ல. அன்பான மனைவி, பாசமிகு குழந்தைகள், பண்பான பெற்றோர் என உங்கள் உறவுகளுடன் இன்பமயமாக வாழுங்கள். சல்லாப சாமியார்களை பின்தொடர்வதை நிறுத்துங்கள்.