• +91 97102 30097
  • reach@yogakudil.org


 à®®à®©à®®à¯ அது செம்மையானால்

 

உலக மனிதர்களின் உள்ளங்களில் அமைதியும், அன்பும் நிறையுமானால் எல்லா மனிதர்களும் இன்பத்தில் இருக்கலாம்.


அறிவாளி, முட்டாள் என்ற பேதம் இன்றியும், ஆதிக்கமற்ற கலப்பும் உலகில் நிலை நிறுத்தலாம். ஆனால் மனிதன் பலதரப்பட்ட கோட்பாடுகளும் கொள்கைகளும் வகுத்து வாழ்வியல் நெறிகளை தன்மீது திணித்துக்கொண்டு ஆர்வமற்ற வாழ்க்கையை நடத்தவே வழிகாட்டப்பட்டு இருக்கிறான்.


மனிதன் என்பவன் அறிவு பெற்ற விலங்கு. ஆனால் அறிவினை பயன்படுத்தாமல் அடுத்தவனின் போதனைகளை பின்பற்றி வாழ்வதற்கு மட்டுமே தனது அறிவினை பயன்படுத்துகிறான்.


மனிதர்கள் என்ற ஒரு கூட்டமாக வாழாமல், தங்களுக்குள் பல கூட்டங்களாக வாழ்கிறார்கள். மேலும் தங்களுக்குள் போரிட்டுக் கொள்கிறார்கள்.


ஒவ்வொரு கூட்டமும் தன்னை முன்னிருத்தி செயல்படுகிறது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தன்னை அறியாமலேயே கூட்ட உறுப்பினர்களாக வளர்க்கப்படுகிறது.


தனது கூட்டத்தின் கோட்பாடுகளை புரிந்து கொண்டு அதன் இயல்பான அறிவை மறந்து விடுகிறது. எனவே எதையும் இயல்பாக பார்க்கும் ஆற்றல் மறைந்துவிடுகிறது.


இயல்பான மனிதனை நாம் இழந்துவிட்டோம். அன்பின் உச்சத்தை அடைந்த மனிதன் ஏமாற்றப் படுகிறான் அல்லது அவனது உள்தன்மை நமக்கு புரியாமல் போகிறது.


நாம் நமக்குள் இருந்த அற்புதங்களை மறைத்துவிட்டோம் பின் மறந்து விட்டோம்.


நம்மை நாம் தேடி அடைவதற்கும் நமது உள் தன்மையின் அற்புதங்களை அறிந்து கொள்ளவும் இப்பகுதி உதவும் என்று இறையருளுடன் நம்புகிறேன்.


மாற்றம் அவசியம் மனிதம் அதைவிட அவசியம். நான் நானாக இருக்க முடியாத அளவிற்கு மாற்றம் தேவையா? என்பதே இப்பொழுது நாம் நமக்குள் கேட்க வேண்டிய கேள்வி.


மனித உணர்வின் மகத்துவத்தையும் மனித மனம் அடைந்த மாற்றத்தையும் தெரிந்து கொள்வோம். தொடர்ந்து வரும் பகுதிகளில் தெளிவாக நாம் நமது மனதைப்பற்றி அறிய முற்படுவோம்.


மனம் என்பது நம்மை நமக்கு அடையாளப்படுத்த உதவும் அற்புத ஆற்றல். உள்முக அவயம். பொறிகளை இயக்கும் மென்பொருள்.


மனதினைக் கொண்டே மனிதனை அறியலாம். ஒருவரை அடையாளப்படுத்தும் உடல், உடலினை இயக்கும் மனதை மையமாக வைத்தே அமைந்துள்ளது.


மனம் உடலில் உள்ளதாக அறிவதால் உள்ளம் என்றும் நேர்மை அல்லது தன்னை தானே ஒழுங்கு படுத்தும் தன்மையுடன் இருப்பதால் நெஞ்சம் என்று அழைக்கிறோம்.


மனம், உள்ளம், நெஞ்சம் என எப்படி அழைத்திடினும் அதை செம்மையாக மாற்றிக் கொள்வதற்கு வழிகளை அடைவதே இப்பகுதியின் நோக்கம்.


உலக மனிதர்களின் உள்ளங்கள் உண்மையால் நிரம்பட்டும், மனம் மகிழ்ச்சியில் திளைக்க இறைவன் அருளட்டும்.


மனிதன் இயல்பாய் மிகவும் இரக்க குணம் படைத்தவன். அவனது செயல்கள் அடுத்தவரை மகிழ்விப்பதற்காகவே பெரும்பகுதி இருக்கும்.


ஆனால் மனிதன் இல்லாததை கற்றுக் கொண்டு தனது இயல்பான குணத்தை இழந்துவிட்டான். மனிதன் என்பவன் மண்ணால் செய்யப்பட்டவன் என்று வர்ணிப்பதைவிட மனதால் வளர்க்கப்பட்டவன் என்பதே சாலச்சிறந்து எனலாம்.


மனம் என்பது சிறப்பாக செயல்படும் இயக்க சக்தி. உடல் இயங்க மனம் கட்டளையிடுகிறது. மனதின் கண் எழும் எண்ணங்கள் உடலினை இயக்கி மனதின் தேவைகளை சந்திக்கிறது.


மனம் உள்ளதால் மனிதன் என்பது சிறந்தது என்று முன்பே பார்த்தோம். மனம் என்பது பார்க்க முடியாத ஒன்றாக இருப்பினும் உணரமுடிந்த ஒன்று என்பது யாவருக்கும் புரியும்.


மனம் என்பது மனிதனுக்கு மட்டுமா? அல்லது பிற உயிர்களுக்கும் உண்டா? என்பதை அறிய முற்பட வேண்டும்.


தன்னை தானே இயக்கும் உயிர்கள் பல இருக்கின்றன. மரம் தன்னை தானே இயக்கும் ஆற்றல் உடையது. சூரிய ஒளியை தேடிச்செல்லும் கிளைகள், நீர் இருக்கும் இடத்தை தேடிச்செல்லும் வேர்கள், பருவ காலத்தில் பூப்பது, இலை உதிர்வது என பல தொழில்கள் மரம் செய்கின்றது.


மரத்திற்கு உயிர் இருப்பதால் செய்கின்றதா! மனம் இருப்பதால் செய்கின்றதா! உயிர் என்றால் என்ன? மனம் என்றால் என்ன? இப்படி கேள்விகள் நமது மனதில் எழுகின்றன.


எல்லா பொருள்களும் மனத்துடனே இருக்கிறது. உயிர் உள்ளது என்றால் மனம், 

உயிரற்றது என்றால் மணம். எந்த பொருளும் அதற்கென தனியாக மணம் இருப்பதை அறியலாம். ஆயினும் உயிருள்ளவற்றின் மனம் அதன் செயல் தன்மையால் "மனம்" என்று அழைக்கப்படுகிறது. 


உயிர் என்பது மனதின் இச்சைக்கு வசப்படும் ஓர் இறைப் பேராற்றல். அற்புத சக்தியாக இருக்கும் ஒன்று மனதிற்கு இசைந்து இருக்கிறது.


மனம் என்பது ஒரு பொருளின் உள்ளே இருந்து "நான்" என்ற ஓர் உணர்வை தருவது.


மனம், மரம் என்ற உயிரின் உள்ளே செயல்படும் பொருளாக இருப்பதால் ஓர் எல்லைக்குள் மட்டுமே செயல்படுகிறது. மரத்தின் குணம் அதன் வாழும் தன்மையை பொருத்து அமைகின்றது.


மனதை அளக்க பயன்படும் அளவுமுறையே அறிவு எனப்படும். அறிவு என்பது ஓர் அறிவு முதல் ஆறு அறிவுவரை பழந்தமிழர்களால் முறைபடுத்தப்பட்டுள்ளது.


தமிழர்களின் பழைமையான இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் அதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இது மனித நாகரிகத்தின் உச்சத்தையும், தமிழர்களின் புரிதலையும் வெளிப்படுத்துகிறது.


*ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே*

*இரண்டு அறிவதுவே அதனொடு நாவே*

*மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே*

*நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே*

*ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே*

*ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே*

*நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.*


தொல் - 1526.


அறிவினை அளந்த தமிழர்களின் திறமைக்கு தலை வணங்கி மேலும் தொடர்வோம். மனம் மகிழ்ச்சியில் திளைக்கும் வரை ஆராய்வோம்.


உலக மனிதர்களின் உள்ளம் தெளிவானால் உண்மை யாவரையும் வாழச்செய்யும். 


*மனிதனின் மனம் என்ற ஒன்றால், அதாவது தன்னையும் தன்னை கடந்த ஒன்றையும் பிறவற்றினோடு ஒத்திசைவு கொள்வதையும் சரியாக செய்யும் உள்முக கருவியால் சிறந்தவன்.*


பார்க்கப்படும் மனிதன் தனக்குள் மனம் என்ற செயல்திறன் மிகுந்த பார்க்க முடியாத கருவியை வைத்திருக்கிறான்.


மனிதன் தன்னை அறிவதற்கு ஏதுவான மனம் அவனுக்குச் சிறப்பானதாக இருக்கிறது.


பண்டைய தமிழர்களால் உயிரின் அறிவின் தன்மையை பகுத்ததை முன்பு பார்த்தோம். அதில், உற்று அறிவது ஒன்று, அதனோடு நாவு உள்ளது இரண்டு, அவற்றின் உடன் மூக்கு உள்ளது மூன்று, உடன் இணைந்த கண் நான்கு, காது கூட்டினால் ஐந்து அவற்றினோடு மனம் என்பதை அடைந்தது ஆறு எனப் பகுப்பதை பார்த்தோம்.


அத்தகைய மனம் மனிதனுக்கு உண்டு என்பதை அறிந்ததும், அறிவிப்பதும், அறிந்து கொள்வதும் அந்த மனமே.


மனிதன் மனம் படைத்திருந்தாலும் அது அவனுக்கு முழு வளர்ச்சி அடைந்து இல்லை அல்லது முழுமையடைந்த நிலையில் மனம் இருக்கவில்லை.


மனிதன் மட்டுமே வளர்ந்து கொண்டே இருக்கிறான். மேலும் இயற்கையின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து புதிய புதிய கருவிகளையும், கருத்துக் கோட்பாடுகளையும் உருவாக்கி மாறாமல் மாறிக் கொண்டே இருக்கிறான்.


மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி தன் இனத்திற்கு தானே எதிரியாக மாறி தனக்குத் தானே வன்முறையான செயல்களை செய்து துன்பமடைகின்றான்.


மனிதன் என்ற ஒரு இனம் மாறி தனக்குள் பல இனம் உருவாக்கிக் கொண்டான். இயற்கை மனிதனை படைத்தது, மனிதன் தனக்குள் பல மாறுதல்கள் படைத்து அநேக பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டான்.


மனிதனின் புறத்தோற்றம் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருந்ததையும், புத்திகூர்மையின் மாறுபாடுகளையும் அறிந்து தனித்தனிக் கூட்டமாக சமூக அமைப்புகள் உருவாக்கி எல்லைகளை வகுத்து போரிட்டுக் கொண்டான்.


இவைகள் மனதின் மூலம் மனிதன் அடைந்த மாறுதல்கள், மனதினை வளப்படுத்திக் கொள்ளத் தெரிந்த மனிதன் மனிதனாக இயற்கைக்கு அல்லது இறைமைக்கு நன்றியுடன் வாழ்கிறான்.


சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அனைத்து மனதிற்கும் உண்டு. எனினும் எல்லா மனிதர்களும் சிந்திப்பதில்லை. அடுத்தவரின் சிந்தனை முடிவுகளை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே பின்பற்றுவதை பிறவி ஞானமாக கருதுகின்றான்.


மேலும் மனிதன் பல இனங்களை சமூக குழுக்களை சார்ந்தவனாக இருப்பதால் தனது சமூக கோட்பாடுகளை சரி என்று எண்ணி எந்தவித கேள்வியும் இன்றி பின்பற்றி தன்னை அறியாமல் ஏனோ விதிக்கு உட்பட்டவனாய் சிக்கி உண்மை இன்பம் அறியாமலேயே வாழ்வை முடிக்கிறான்.


சமூக அமைப்பினை கடந்து சிந்தித்த மனிதனை பின்பற்றி புதிய சமூக அமைப்புகள் உருவாகுவது தொடர்கதையாக இன்றும் வளர்கின்றது.


இயற்கை ஓர் எல்லை ஏற்படுத்தி இருக்கின்றது என்றால் இவனாக அரசியல் எல்லைகள் வகுத்து தனது எல்லையற்ற சுதந்திரத்தை எல்லைக்குள் உட்படுத்திக் கொண்டான்.


பலதரப்பட்ட இயற்கையின் சூழலில் வளர்ந்ததால் பலதரப்பட்ட மொழிகளும், உருவ அமைப்புகளும் மனிதனுக்கு வாய்த்திருக்கின்றன.

எனவே மனிதன் தனக்குள் பலதரப்பட்ட குழுவாக (இனங்களாக) மாறி தனக்குள் ஓர் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் தவிக்கிறான்.


இத்தவிப்பை அல்லது ஒற்றுமை உணர்வை வளர்க்கும் உத்திகளை கைக்கொள்வது மனிதனுக்கு அவசியம். மனிதனாகவே ஏற்படுத்திய எல்லைகளை முதலில் கடக்க வேண்டும்.


அவைகள் குறித்து வரும் பதிவில் ஆலோசிப்போம்.



உலகம் சமநிலை பெறுவதற்கும், உயர்வு தாழ்வு இல்லாத நிலை அடைவதற்கும் இறைவன் அருள்வாராக.


மனம் என்ற கருவி மனிதனின் தனிச்சிறப்பு என்பதையும், அதனை பண்டைய தமிழர்கள் அழகாக பாகுபாடு செய்திருப்பதையும், தொல்காப்பியத்தின் அறிவுநிலை குறித்த விளக்கத்தையும் முன்பு பார்த்தோம்.


கற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் மனிதன் இருப்பதால் எதையும் கற்றுக்கொண்டு சமூக குழுவாக மாறுகின்றான். எனவேதான் இன்றைய உலகில் அநேக சமூக குழுக்கள் இருக்கின்றன.

மனம் அறிவின் உச்சமாக இருப்பதால் மனதின் மூலம் மனிதன் சாதிக்கும் நிகழ்வுகள் ஏராளம். மனம் படைத்த மனிதன் தனக்காக மொழிகளை கண்டு பிடித்தான்.


தனது உணர்வுகளையும் தனது தேவைகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஓசைகளை எழுப்பினான். அந்த ஓசைகளை தொடர்ந்து எழுப்பி அதற்கான பொருட்களை வரையறுத்தான்.


மேலும் எழுப்பப்படும் ஓசைகளை அதாவது சப்தங்களை வரி வடிவமாக மாற்றினான். இதுவே மொழி வளர்வதற்கு அடிப்படைக் காரணம்  எனலாம்.


மனிதன் மொழிகள் வளர்வதற்கு முன்னரே பலதரப்பட்ட இடங்களில் வாழ்ந்து இருக்கக்கூடும். ஆகவேதான் பலதரப்பட்ட மொழிகள் பிறந்திருக்கின்றன.


மனிதன் பேசும் மொழியின் அசைவுகள் அவனது காலச்சூழல்களுக்கு ஏற்ப இருக்கின்றது. உதாரணமாக குளிர் நிறைந்த இடத்தில் தோன்றிய மொழிகளில் ஓசை அமைப்புகள் அதிகமாக வாயை திறந்து மூடும்படியாக இல்லை. வாயின் மெல்லிய அசைவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.


வெப்பம் நிறைந்த இடத்தில் தோன்றிய மொழிகளில் ஓசை அமைப்புகள் வாயை நன்கு திறந்து மூடும்படியாக இருக்கிறது.


மனிதனின் மொழி அமைப்புகள் அவர்கள் வாழ்ந்த இடத்தினை பொருத்தும் அமைந்தது. இன்று காலச்சூழலை தனக்கு சாதகமான ஒரு அம்சமாக மாற்றும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையாக உள்ளது.


இன்றைய மனிதன் எல்லாவிதமான ஓசை அமைப்புகளையும் உச்சரிக்க முடிந்தவனாக இருக்கிறான். மேலும் எல்லா மொழியின் வார்த்தைகளையும் அதன் அர்த்தத்தையும் புரிந்துக் கொண்டு செய்ல்படுத்த உகந்த அறிவுடன் வாழ்கின்றான்.


இன்றைய் சராசரி மனிதன் இரண்டு மொழிகளுக்கு மேல் தெரிந்து கொண்டிருக்கிறான். உயர்ந்த அறிவுகளையும், அறிவியல் தகவல்களையும் பெற வேண்டி பிற மொழி நூல்களை பயில்கிறான்.


எனவே மொழியால் நாம் வேறுபாடு காட்டாமல் மனிதன் என்று ஒற்றுமை உணர்வினை பெறுவோம்.


மனதினை மயக்க நிலையிலிருந்து மீட்போம். மொழியினை நேசிப்பது என்பது வேறு, தன் மொழி மட்டுமே சிறந்தது என்பது வேறு. தாய் மொழியை நேசிப்பது நன்று. பிற மொழியையும் அதன் சிறப்புகளையும் புரிந்து கொள்ளாமல் இருப்பது நன்றன்று.


நாம் மனிதர்கள் என்பதற்கு அடையாளம் அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம் என்பதும் அடுத்தவருடன் நாம் எப்படி உறவாட வேண்டும் என்று தீர்மானிக்கிறோம் என்பதும் முக்கிய பங்கு வகிக்கிறது.


நமக்கு இருக்கும் அற்புத ஆற்றல் மனம் என்ற உள்முகக்கருவி அதாவது மென்பொருள் போன்ற அமைப்பு.


ஆதி மனிதன் முதல் இன்றைய மனிதன் வரை மனதை வளப்படுத்தும் வேலையை தொடர்ந்து செய்கிறான். எனவே மனித இனம் சிறப்பாக இந்த பூமியில் வாழ்கிறது.


இதில் மனித இனம் முழுவதுமாக சிறப்பாக இல்லை. சில மனிதர்கள் சிறப்பாகவும், சில மனிதர்கள் வேதனை, துக்கம், வறுமை, அறியாமை என பலதரப்பட்ட வகையில் பின்தங்கிய நிலையிலும் வாழ்கிறார்கள்.


ஆறாம் அறிவின் துணையுடன் மனிதன் சிறந்தவனாக காட்டிக் கொள்ள முயல்கிறானே அன்றி உண்மையை அல்லது எதார்த்த சூழலை புரிந்து கொள்ளும் தன்மையுடன் இல்லை.


எங்கோ ஒரு சில மனிதர்கள் மட்டுமே தன்னளவில் சரியான புரிதலோடு வாழ்கின்றார்கள். எல்லா மனிதர்களும் ஆழ்ந்த புரிதலோடு வாழ நேர்ந்தால் எல்லாம் இன்பமயமாக இருக்கும்.


மனம் செம்மையாகாமல் வலிமையானதாகவே மாறுகிறது. காரணம், ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு புரிந்ததை சரியானதாகவே நினைக்கிறான். அதன் அடிப்படையில்தான் தனக்கான கூட்டத்தை உருவாக்கி தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்கிறான்.


வலிமையான மனமே ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறது. ஆழ்ந்த புரிதல் உள்ள மனிதன் தனது கருத்துக்களை அடுத்தவருக்கு போதிக்க முடியாமல் வலிமைக்குன்றி தன்னளவில் தனிமையாக இருக்க முயல்கிறான். மனிதன் என்பவன் மகத்துவமானவன். மொழி, இனம் கடந்து ஒற்றுமையுணர்வு கொள்ளும் பேராற்றல் அவனுக்குள் இருக்கிறது.


இருப்பினும், உண்மையறிவு இன்றி போதனைகளைக் கடந்து சிந்தித்து தனக்குள் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் அமைதியான சூழலைச் சந்திக்க முடியாமல் அவசர கதியில் வாழ்ந்து இறந்து விடுகிறான்.


வாழும் மனிதன் வாழ்ந்த மனிதனின் கருத்துக்களை உள்வாங்கி மேலும் சிந்தித்து தன்னை புரிந்து கொண்டால் எல்லோரும் இன்புற்று மகிழ்வான வாழ்வை வாழலாம்.


பொதுவாக போதனையாளர்கள் நம்மை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்து சிறைபடுத்துகிறார்கள். நாம் ஏதாவது ஒரு எல்லைக்குள் அடைபட்டு அதற்குள்ளாகவே வாழ்ந்து மடிகிறோம்.


இயற்கை அறிவினை முழுவதும் நாம் பயன்படுத்தும் பொழுது எல்லைகளைக் கடந்து ஒப்பற்ற ஆனந்தமான சூழலை அடைவோம். 


எனவே மொழி, இனம் கடந்து ஒன்றுபடுவோம். நமக்குள் நம்மை அறியும் உத்திகளை தொடர்ந்து காண்போம். மீண்டும் சந்திப்போம்.


மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு இறைவா, குணம் படைத்தேன் என்னில் சிறப்பதற்கு என்று யார் புரிந்து கொள்கின்றார்களோ அவர்கள் பேரின்பம் எய்துவது எளிது.


மனம் பற்றிய அறிமுகமும், ஆதியிலேயே தமிழர்கள் அதன் தன்மையறிந்து ஆறு நிலையாக பிரித்து, அறிவுத்திறத்துடன் விளக்கியதை முன்பு பார்த்தோம்.


தான் எதைக் கற்கிறதோ அதை செய்யவும் அதை திருத்திக் கொள்ளவும் மனதால் முடியும். மனம் தனக்கு ஏற்புடைய தகவல்களை உள்வாங்கி அதனை சரி என்று அடுத்தவர் உணர்வதற்கு ஏதுவான செயல்களை செய்கிறது.


மனம் உள்ளதால் மனிதன் சிறந்தவனாகவும், சீர்கெட்டவனாகவும் இருக்க முடிகிறது. மனிதன் மனிதனை அடிமையாக செய்வதற்கும், ஏனைய பொருள்களை தன்வசப்படுத்துவதற்கும் மனமே காரணம்.


மனம் அறிவு நிலையில் தனக்குள் பேசிக் கொள்ளும் தன்மையை இயல்பாய் பெற்றுள்ளது. அதுபோலவே தனக்குத்தானே பேசிக்கொண்டு மனச்சிதைவுடன் செயல்படவும் செய்கிறது.


தனக்குத்தானே பேசிக்கொண்டு தன்னை நிர்வாகம் செய்யும் மனிதன் புத்திசாலியாகவும், தனக்குத்தானே பேசிக்கொண்டு தன்னை நிர்வாகம் செய்ய முடியாதவன் பைத்தியக்காரனாகவும் இருக்கிறான்.


மனம் எதையும் கற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருக்கிறது, எதையாவது செய்யும் ஆற்றலுடன் இருக்கிறது.


மனதை அறிவதும் மனதாகவே இருக்கிறது. இதோ இந்த எழுத்துக்களின் கோர்வையில் வரும் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்வதும், பார்க்கும் பொழுதே அதைப் படித்து அதன் கருத்துக்களை உள்வாங்கி தனக்குள் புரிந்து கொள்வதும் மனமே.


மண்ணிலிருந்து வெளிப்படும் வாசனைப் போலவே மனிதனிலிருந்து வெளிப்படுவது மனம். ஆனால் மனிதனுக்கு மனிதன் மனதின் திறன் மாறுபட்டுள்ளது.


படிப்பதின் வேகம் ஆளுக்கு ஆள் மாறுபடுவதற்கு இதுவே காரணம். மனம் ஆற்றல் வாய்ந்ததாக மாறுவதற்கு மனதில் எழும் எண்ணங்களே அடிப்படை.


மனம், எண்ணங்கள் என்ற தொடர்ந்த அலையை எழுப்புகின்றது. மனம் ஏதாவது ஒரு வகையில் எண்ணத்தை தோற்றுவிக்கிறது. மனம் எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு அனுபவமும், எதிர்பார்ப்பும் முக்கிய காரணியாக இருக்கிறது. பிறந்த குழந்தை அழுகையை மொழியாக பயன்படுத்துகின்றது. அழும்பொழுது அரவணைக்கும் தாயை புரிந்து கொண்டு தனக்கு தேவையான பொழுது அழுது தாயை அழைக்கின்றது.


தாய் அருகே இருப்பதால் தனக்கு சுகமாக இருப்பதை உணர்த்த நகைப்பினை வெளிப்படுத்துகிறது. அதன் வெளிப்பாடே இன்று அதாவது வளர்ந்த பின்பும் நண்பர்களை பார்க்கும் பொழுது புன்னகை பூக்கிறான்.


*மனம் முழுவதும் இறைவன் நிரம்பட்டும் இறை சிந்தனை பெருகி, இளகி, உருகி, நெகிழ்ந்து தன் நிலையை, தன் நிறையை உணரட்டும்.*


முந்தைய பதிவில் பிறந்த குழந்தை அழுகையை மொழியாக பயன்படுத்தி அதன்பின் புன்னகையை மொழியாக பயன்படுத்தியதை பார்த்தோம்.


வளரும் குழந்தைகள் மொழியின் ஓசைக்குறியீடுகளை மெதுவாக பயன்படுத்தி அதன் தன்மைகளையும் நுட்பங்களையும் புரிந்து கொள்கிறார்கள்.


பொருள்களின் அடையாள ஓசைக் குறியீடுகள் மொழிக்கு மொழி மாறுபடுகின்றது. எனவே ஒவ்வொரு குழந்தையும் அதனதன் தாய் மொழியில் தனக்குள் சிந்திக்க தொடங்குகிறது.


*சிந்தனை என்பது மனதில் எழும் எண்ணங்களின் கூட்டத்தை ஒருங்கிணைத்து தனக்குள் கேள்வியும் பதிலும் என்று பேசிக்கொள்வது.*


*எப்படி செய்யலாம் என்ற கேள்வியும், இப்படி செய்யலாம் என்ற பதிலும் பெறுவதற்கான எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை.*


இங்கே அடியேன் எழுதுவதை படிப்பதும், படித்ததிலிருந்து புரிந்து கொள்வதும், ஏற்பது மற்றும் மறுப்பதும் உங்களின் சிந்தனை தெளிவாகும்.


சிந்தனை செய்வதால் மனிதன் விலங்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறான். எப்படி வாழலாம் என்ற கேள்வியும் இப்படி வாழலாம் என்ற பதிலும் அவனை அதாவது மனிதர்களாகிய நம்மை இப்படி வாழச்செய்கிறது


மனம், எண்ணம், சிந்தனை என்று விரிந்ததால் சிந்தனை தெளிவு என்று ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு முடிவை தீர்மானிக்கிறான்.


நான் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற முடிவை மனம் எடுப்பதற்கு தனக்குள் பேசிக்கொள்வது அடிப்படையாக இருப்பினும் சுற்றுப்புற சூழலே அந்த முடிவுக்கு முழு காரணமாக அமையாவிட்டாலும் அதன் பங்கு இருக்கவே செய்கிறது.


சிந்தனை என்பது மொழியில் அமைவது போலவே சிந்தனை தெளிவு என்பது புறச்சூழலாகிய கலாச்சாரம் சார்ந்து இருக்கிறது.


வாழும் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை அறிந்து அவர்களோடு ஓர் ஒத்திசைவு கொள்வதையே தனது சிந்தனைத் தெளிவாக குழந்தை பெறுகிறது.


இதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த மனிதர்களின் நடை, உடை, பாவனைகளை தன்னை அறியாமல் செய்கிறான். ஆனால் அவைகள் தனக்குள் பேசி எடுத்த முடிவு என்பதை தானே மறந்து அதுவே இயல்பு என்று உணர்கிறான்.


இன்றைய மனிதனின் இருப்பு நிலைக்கு அவனது ஈடுபாட்டுத் தன்மையே காரணம். எனவேதான் ஒரு குடும்பத்து குழந்தைகளின் பண்புகள் சற்று மாற்றமடைகிறது.


ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் சிந்தித்து எடுக்கும் முடிவைத்தான் தன்னிலிருந்து வெளிப்படுத்துகிறான். எந்த தனி மனிதனின் தோற்றமும், செயலும் அவனது சிந்தனையை மூலமாக வைத்துத்தான் இருக்கின்றது.


தனிமனிதனின் சிந்தனை தெளிவு அடுத்த மனிதனுக்கு தவறாக புரிவதற்கு காரணம், சிந்திக்கும் விதத்தில் ஏற்படும் மாற்றமே அல்லாமல் வேறொரு காரணம் இல்லை.


ஒவ்வொரு மனிதனும் சமூக அங்கீகாரம் பெறுவதற்கே முற்படுகிறான். சமூக ஒழுக்கத்தை அறிந்து அதனுடன் ஒத்திசைவு பெற்றுவிட்டதால் தனது சமூக ஒழுக்கமே சிறந்தது என்று கற்பித்துக் கொள்கிறான்.


மனதிற்கு மனம் பலவிதப்பட்டதாக இருப்பதால் ஒத்தசிந்னை அமையுமா? அப்படி அமைவதற்கு வழிகள் உண்டா? அடுத்த பதிவில் பார்ப்போம்.


உண்மையை அறிய உணர்வை வளர்த்துக் கொண்டு அறிவுடன் செயல்பட வேண்டும். இறைவன் நம் இதயத்தை நிரப்புவதற்கு நம்மை நாம் தயார் நிலையில் வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும்.


அருள் மழை பெய்யும் நேரம் குறிப்பிட்ட காலத்திற்கு உட்பட்டு இல்லை. எப்பொழுதும் எங்கும் அருள்மழை வந்துகொண்டே இருக்கிறது. *குடையாக நமது எண்ணங்கள் தடையாக இருக்கிறது.*


மனிதனின் மனம் எங்கு பிறந்து வளர்கிறதோ அங்கு நிலவும் நடைமுறைகளை கற்று உணர்கிறது. மனம் என்ற கருவியின் தன்மை ஒன்றாக இருப்பினும் தான் கற்றுக் கொண்டதின் பொருட்டு ஒன்றுக்கு ஒன்று மாறுபாடுடன் இருக்கிறது.


*மனம் தனக்குத் தானே பேசிக்கொள்வது சிந்தனை. அங்கு எடுக்கப்படும் முடிவு சிந்தனை தெளிவு. தனக்குத் தானே ஏதோ ஒன்றினை பற்றி எண்ணங்களை வளர விடுவது கற்பனை என எல்லா மனித மனதும் செயல்படுகின்றது.*


மனித மனம் பல்வேறாக இருப்பது இந்த பூமியின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. எப்படி மனிதன் உடல் அளவில் பல்வேறாக இருக்கிறானோ அப்படியே மனித மனமும் பல்வேறாக இருக்கின்றது.


மனிதன் சிந்திப்பதும் பலவேறாக இருப்பதால்தான் பலதரப்பட்ட படைப்புகள் இந்த பூமியில் பரவி இருக்கிறது.


ஆபத்துக்களை உருவாக்கும் ஆற்றலும் மனித மனதிற்கு அதிகம் இருக்கிறது அல்லது அறியாமையில் நிலைப்பதற்கான படைப்புக்களை உருவாக்கும் சிந்தனை மனித இயல்புகளில் ஒன்றாக இருக்கிறது.


தான் கற்றதை சரி என்றும் தனது அனுபவம் முற்றிலும் உண்மை என்றும் சிந்தனை தெளிவை ஏற்படுத்திக்கொள்வது மனதின் அடிப்படை அம்சம்.


மனம் செம்மையாவது என்பது எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்பது இல்லை.


எல்லோரும் இன்புற்றிருக்க தகுந்த வழிகளை அறிய வேண்டும் என்பதே.


மொழிகள் பலவேறாக இருப்பதும், உடை அலங்காரம், உணவு முறையில் பாகுபாடு என பலவிதமாக மனித வாழ்க்கை இருப்பதும் இயற்கை அன்னையின் அன்பு பரிசு.


மனிதர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்குமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். யார்? யார்? யார் நமக்கு எவ்வகையில் உறவு? எவருடன் எப்படி நாம் நடப்பது என்று புரியாமல் இருக்கும்.


பகுத்தறிவு இருப்பதால் ஒவ்வொரு மனிதனுடன் தன்னை தனிமை படுத்திக் காட்டுகிறான் அல்லது தனிமைபடுத்திக் காட்டும் பண்பால் பகுத்தறிவு வளர்ந்திருக்கிறது.


எனவே ஒத்த சிந்தனை என்பது அமையாது. அப்படி அமைந்தால் மனிதகுலம் தொடர்ந்து மாற்றத்தைக் காணாது.


மனிதனின் இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் மாறுபட்ட சிந்தனைகளே. மனிதன் வீழ்ச்சிக்கும் இந்த மாறுபட்ட சிந்தனையே அடிப்படையாக அமையக்கூடாது என்றால், சிந்தனையின் முடிவுகள் திணிப்பதாக இருக்கக்கூடாது.


ஒரு நேர்த்தியான மனிதனின் மனம், மனிதன் என்பவன் ஏன்? எப்படி வாழவேண்டும் என்றும் எது நல்லது எது யாவருக்கும் நன்மையுண்டாக்கும் என்றும் சிந்திக்க வேண்டும்.


அப்படிப்பட்ட சிந்தனையாளர்களின் படைப்புகள் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் உதவும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை.


ஆனால் மனிதர்கள் போதனைகளின்படி நடிப்பதையே மனம் செம்மையானதாக கருதுகிறார்கள். பணிவைவிட கீழ்ப்படிதல் நல்லது என்று ஒரு போதனையாளர் கூறியிருக்கிறார். இது ஆரோக்கியமான மனிதனை உருவாக்க தடையாக அமையும்.


தன் சமூகம் சார்ந்த சிந்தனையும், தனது வட்டம் வளமாக இருக்க நினைக்கும் எண்ணங்களும் மனதின் சிறுமையைக் காட்டுகிறது.


பின்தொடர்வதற்கு எத்தனிப்பதும், முன் மாதிரிகளை உருவாக்கிக் கொள்வதும் மனிதனுக்கு அவன் வளர்ச்சிக்கு தடையாக அமையும்.


மாறாக, முன்னோடிகளை புரிந்து கொண்டு தனக்கான பாதையை அமைத்துக் கொள்வதே செம்மையான மனதின் உயர்ந்த பண்பு.