• +91 97102 30097
  • reach@yogakudil.org


கேள்வியின் நாயகன்

 

ஆன்மீக வகுப்புகள் பல, பணம் செய்வதற்கு ஏற்ற வழியில் முதல் வழி ஆன்மீக பயிற்சிகள் மட்டுமே. தொண்டாற்றிய நிலை மாறி பணம் பண்ண ஏற்ற வழியாக ஆன்மீகம் மாறிவிட்டது.


பணம் இன்றி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு இன்றைய மனிதன் மாறிவிட்டான். எதையும் பணத்தால் சாதிக்கும் தன்மையை மனிதன் உருவாக்கி இருக்கிறான்.


பணம் அவசியம் என்பதால் ஆசிரியரும் பணத்தை குறிக்கோளாக கொள்வது தவறில்லை. ஆனால் பணம் மட்டுமே பிரதானமாக அல்லாமல் நல்ல படிப்பினை தரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் குறைவாக இருப்பதே குறைப்பாடாக இருக்கிறது.


இங்கே கேள்வியின் நாயகன் அவரது பெயர் சரியாக சொல்லவேண்டும் என்றால் கொஞ்சம் கடினம். காரணம் என்னை கோபமாக பார்க்கும் குணம் அவருக்கு அதிகம். எனவே அவரது பெயரை சரியாக சொல்ல முடியாமல் தவிக்கிறேன். அவ்விடத்தில் எதாவது ஒரு பெயரையோ அல்லது உங்கள் பெயரையோ பொருத்திக் கொள்ளலாம்.


ஒருமுறை நாயகன் தன் நண்பன் ஒருவன் உதவியுடன் மைய உணர்வு என்னும் ஓர் இடத்திற்கு ஆன்மீக பயிற்சி வகுப்புக்குச் சென்றார்.


பயிற்சி வகுப்பிற்கு அழைப்பதற்கு ஆசிரியரே, "வாருங்கள் நீங்கள் கேட்பது எதுவானாலும் உங்களுக்கு கிடைக்கும். அதற்கு நான் உதவுவேன். மேலும் நீங்கள் கேட்பது எப்படி என்று உங்களுக்கு கற்றுத்தருவேன்" என்று மயக்கி ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்.


ஏக்கத்தில் திகைக்கும் மனிதர்களோ, அடடா நமக்கு சரியான ஆசிரியர் கிடைத்துவிட்டார் என்ற ஆசையில் பயிற்சி வகுப்பிற்கு ஏராளமாக திரண்டார்கள்.


அதில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நாயகர்.


பாடம் துவக்கப்பெற்று பயிற்சிகள் அரங்கேறிக் கொண்டே இருந்தது. நாயகனும் கவனித்துக் கொண்டே இருந்தார்.


ஆசிரியருக்கு பெயர் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சிவசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள் அல்லது ராமசாமி என்றும் வைத்துக் கொள்ளுங்கள் அது உங்கள் விருப்பம். இந்த பூமியில் வாழும் எல்லா மனிதனுக்கும் ஒரு தனிப்பெயர் இருக்கிறது. அப்படி பெயல் இல்லை என்றால் அது காட்டுவாசியாகத்தான் இருக்க முடியும்.

சாமியை பொருத்தமட்டில் தனது புரிதலை பிறர் அறிந்து கொண்டு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆவலால் செயல்படுவதை சிறப்பாகவே செய்து கொண்டிருந்தார்.


அவரது அழைப்பு பொய்யை காட்டியே இருந்து. ஆமாம் அவர் போதித்ததற்கும், அவர் அழைப்பு விடுத்ததற்கும் சரியான சம்பந்தம் இல்லை. 


அதே சமயத்தில் அவர் பொய்யை கற்பிக்கவில்லை. அவரது உச்சகட்ட புரிதலை மட்டுமே கற்பித்துக் கொண்டிருந்தார். எந்த போதனை செய்பவரும் தனது புரிதலை விட போதிக்க முடியாது. எனவே அவரை பொருத்தமட்டில் அவர் சரியாகவே செயல்பட்டார்.


சாமியின் போதனைகளின் சாரம் கொடுப்பவனே எடுக்கும் அதிகாரம் பெற்றவன் என்பது. ஆயினும் அதனை புரிந்து கொள்ள முடியாத மந்தை கூட்டங்களுக்காகவே அவர் போராடி போதித்தார்.


யாரோ சிலர் மட்டுமே அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே சாமியின் பயிற்சி வகுப்புகள் வெற்றிநடை போட்டது.


சாமி ஆன்மீகம் என்ற தலைப்பில் வாழ்வியல் பாடம் நடத்துகிறார். ஆன்மீகம் வாழ்வியலை உள்ளடக்கிய ஒன்று என்பதால் சாமியை குறை சொல்ல முடியாது.


சாமியாரை சரியாக புரிந்து கொள்ள முடியாத மானிட மந்தையோ அவரின் வகுப்பை ஆன்மீகம் என்றே புகழ்ந்தது. நமது நாயகனும் அவ்வரிசையில் சளைத்தவரில்லை.


நாயகர் எதனையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் மட்டுமே வாழ்பவர். மேலும் உண்மையை தேடும் மனிதர் என்று தன்னை சுயமதிப்பீடு செய்துக் கொண்டவர்.


பல்வேறு ஆன்மீக வகுப்புகளுக்கு சென்றவர் என்பதால் அவரால் கேள்வி கேட்பதை தடுக்க முடியவில்லை. எனவே சாமியை பார்த்து அடிக்கடி கேள்விகள் கேட்டு தனக்கு ஏதோ புரிந்து விட்டதுபோல் அமைதியடைவார்.


அவரது அமைதி மேலோட்டமானது. தற்காலிகமாக அவரின் கேள்விகள் அடக்கப் பெற்றுவிடும். நாயகர் அவரை (சாமியை) கேட்ட கேள்விகள் மிகவும் மிக மிகவும் முக்கியம் வாய்ந்த கேள்வி நான் யார்?  என்று கேட்டதுதான்.


சாமி மிகவும் சிறப்பாக பதில் தருவதாக நினைப்பவர் அன்றி தெரியாது என்ற பதிலை பதிலாக நினைப்பது இல்லை.

ஆயினும் சாமி தனக்கே உகந்த தன்மையில் நான் இப்பொழுதும் உன்னை காதலிக்கிறேன், என் நேசம் மகத்தானது. என்னை இக்கட்டில் நிறுத்தும் கேள்வியை கேட்டாலும் உன்னை நேசிக்கிறேன் என்றே விடை கொடுத்தார்.


ஒரு தனி மனிதனை மற்றொரு மனிதன் தெரிந்துக் கொள்வது சாத்தியமற்றது. தன்னை தான் அறிந்துக் கொள்ள வேண்டுமே தவிர பிறரிடம் அதை எதிர்பார்ப்பது அபத்தமானது.


தன்னை அறிந்துக் கொண்டவன் மட்டுமே பிறரையும் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தன்னை அறிவது முதல் கடமை. சாமி தன்னை அறிந்து கொள்ள ஒரு ஆன்மீக பள்ளியில் மாணவனாக இருக்கிறார். அவரிடத்தில் நாயகன் தன்னை யார் என்று கேட்பது அநியாயம்.


*கேள்வியை பொருத்தமட்டில் எப்பொழுதும் புனிதமானதாகவே இருக்கிறது. அறியாமையிலிருந்து அறிவை நோக்கியும், உண்மையிலிருந்து உண்மையை நோக்கியும் நகர்வது கேள்வியின் இயல்பு.*


*கேள்வியை பொருத்தமட்டில் எப்பொழுதும் புனிதமானதாகவே இருக்கிறது. அறியாமையிலிருந்து அறிவை நோக்கியும், உண்மையிலிருந்து உண்மையை நோக்கியும் நகர்வது கேள்வியின் இயல்பு.*


பதில்கள் உண்மையை சந்திக்கும் வாய்ப்பினை சில சமயத்தில் தவறவிடப்படுகிறது. காரணம் அறியாமையில் இருப்பவர் பதில் தர முனைவதே.


கேள்வி உண்மையாக இருந்தால் பதில் நிச்சயமாக கிடைக்கும். காலத்தில் மாற்றம் இருக்கலாம், ஆயினும் பதில் இல்லாமல் போகாது.


கேள்விகள் அர்த்தமற்றவையாக இருப்பதற்கு காரணம் அறிவாளியின் கேள்வியை தனதாக ஏற்றுக் கொண்டு கேட்பதால். கேள்வி அறிவின் முதல் படி. அடுத்தவரின் கேள்வியை நாம் எடுத்துக் கொண்டு பதில் தேடினால் அதுவே அழிவின் முதல் படி.


எனவே கேள்வி நமதாக இருக்க வேண்டும். கேள்வியின் நாயகனின் கேள்வி உண்மையில் அவரது அறிவின் பொருட்டே வந்திருக்கிறது. எனவேதான் அவர் தேட முனைகிறார்.


சாமி போன்றவர்கள் தடம் மாற்ற வகை செய்கிறார்கள். ஆயினும் கேள்வியின் நாயகன் இன்னும் கேள்வியுடன் இருக்கிறார். எனவே இன்னும் அவர் கேள்வியின் நாயகனே.